சாதியால் தமிழக மாணவர் குஜராத்தில் புறக்கணிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் மாரி ராஜ். இவர் அகமதாபாத்தில் உள்ள பி. ஜெ மருத்துவகல்லுரியில், பொது அறுவை சிகிச்சை பிரிவில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவர் மாரிராஜ், மனமுடைந்து கடந்த ஜனவரி மாதம் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டதால் உயிர் பிழைத்தார்.

இது தொடர்பாக பி. ஜெ மருத்துவகல்லுரி பேராசிரியர்கள் பரத் தலல், பங்கஜ் மோடி உள்ளிட்ட ஒன்பது மருத்துவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள சீபுக் காவல் நிலையத்தில் சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்கொலை முயற்சிக்குப் பிறகு, குணமான மருத்துவர் மாரிராஜ், 15/1/2018 அன்று உரிய மருத்துவ சான்றிதழ்களோடு பணிக்கு திரும்பினார். ஆனால் இன்று வரை அவர் பணி செய்வதற்கான யூனிட், துறையால் ஒதுக்கப்படவில்லை. மேலும் அவர் பல்கலைகழக தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டில் பேரா.பரத் தழல் கையெழுத்து போட மறுத்துள்ளார். தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்றால் மட்டுமே தேர்வெழுத அனுமதியளிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகமும், பேராசிரியர்களும் மாரிராஜை மிரட்டியுள்ளனர்.

தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 25ஆம் தேதி கடைசி நாள். வரும் மே 1ஆம் தேதி தேர்வு நடக்க இருக்கும் நிலையில், மருத்துவர் மாரிராஜீன் தேர்வு விண்ணப்பம் மட்டும் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. இதனால் படிப்பதா வேண்டாமா என்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக மருத்துவர் மாரிராஜ் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவர் மாரிராஜ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாரிராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

அமைச்சர் விஜயபாஸ்கர் என்மீது வருகைப் பதிவேடு, திறமைக்குறைவு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார். இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. வெளிமாநிலங்களில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள், மற்றவர்களை விட பத்து சதவீதம் அதிக திறமையுடன் இருக்கிறோம். அதனால் தான் சாதி, இன, மொழி ரீதியாக எங்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

மிகப்பெரிய பதவியில் இருந்து கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்கு புறம்பாக பேசி எனக்கெதிராக செயல்படுகிறார். அவர் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என மருத்துர் மாரிராஜ் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.