இந்த 2-நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் | சுப்ரீம் கோர்ட் அதிரடி!

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர வரம்பை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.

Image result for diwali supreme court

தீபாவளி அன்று அதிகப்படியான பட்டாசுகள் வெடிப்பதால் கற்று மாசுபடுகிறது என்றும், இதனால் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன என்றும், பல்வேறு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எதிர்த்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 23-ஆம் தேதி இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள்
தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை மீண்டும் சீராய்வு செய்ய வேண்டும் என்று சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது,

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

சுப்ரீம்கோர்ட்டு இரவு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு இருக்கும் பட்டாசு வெடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். மேலும் இரவில் 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நிலை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் அதிகளவில் புகை மாசு ஏற்பட வழி ஏற்பட்டு விடும்.

எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறியதாவது,

தீபாவளி பண்டிகை தென் மாநிலங்களில் ஒரு நேரத்திலும், வட மாநிலங்களில் மற்றொரு நேரத்திலும் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்பதில் கோர்ட்டு தெளிவாக உள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அந்த 2 மணி நேரத்தை தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அம்மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி முடிவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: