இப்படித்தான் விஜயகாந்த் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டாரா.. !

உடல்நலம் சரியில்லை என்று அறிவித்ததோடு சரி, தமிழகத்தில் விஜயகாந்தும் அவரது கட்சியான தேமுதிகவும் உண்மையில் இருக்கிறதா? என்கிற சந்தேகங்கள்தான் மக்களிடம் அதிகம் இருக்கின்றன.

நேராக நடக்க முடியாமலும், தெளிவாக பேச முடியாமலும் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிகிச்சை காரணமாக அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றார். அங்கு விஜயகாந்த் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி காலமானார். கருணாநிதி இறந்த செய்தி அறிந்ததும் துடிதுடித்துப்போன விஜயகாந்த் கண்ணீர் மல்க தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது சோகத்தை தெரிவித்தார். அப்போது தான் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை அனைவரும் வீடியோவில் பார்த்தனர், அவர் குணமாகியிருப்பர் என்று தான் எல்லோரும் நினைத்தனர், அனால் அவர் மிகவும் தளர்வான பேச்சுடன் கம்பீரம் இழந்து காணப்பட்டார்.

சரி சிகிச்சை முழுவதும் முடிந்த பின்னர் விஜயகாந்த் பூரண குணமடைவார், என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது தான் விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது முதல்கட்ட சிகிச்சையை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பினார்.

அந்த சமயத்தில் கருணாநிதியின் சமாதியில் விஜயகாந்த்தை பார்த்த மக்களும் தேமுதிக கட்சியினரும் ஆறுதல் அடைந்தனர். ஆனால் அப்போது விஜயகாந்த் நிற்க கூட முடியாத நிலையில் மிகவும் தளர்வான தோற்றத்தோடு காணப்பட்டார். விஜயகாந்தின் இந்த நிலையைக் கண்ட மக்களும், தேமுதிக தொண்டர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது? அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்? என்பது தேமுதிக உறுப்பினர்களுக்கோ, தமிழக மக்களுக்கோ இப்போதுவரை தெரியாது. இதுகுறித்து தேமுதிக கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டபோது அவர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்க செல்வார் என்று தேமுதிக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் விஜயகாந்த் இப்போதுவரை இரண்டாம் கட்ட சிகிச்சைக்கும் செல்லவில்லை கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதும் இல்லை.

இதனிடையே விஜயகாந்துக்கு நிறைய முறை உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி வைக்காது என்று அறிவித்தார். அதனால் அவரை எந்த கட்சி தலைவர்களும் மருத்துவமனையில் நேரில் வந்து சந்திக்கவே இல்லை.

இப்படியாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், கொஞ்சம் கொஞ்சமாக தீவிர அரசியலில் இருந்து விலகி சென்று, தற்போது முழுமையாக சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்று வருகிறார்.

தற்போது தேமுதிகவின் கட்சியின் மொத்த அதிகாரமும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் சென்றுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய மகன்களும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.