தீபாவளி மாமூல் வசூல் செய்த இன்ஸ்பெக்டர் | லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் மாமூல் வசூலிப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 1-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 24 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் ரூ.44.30 லட்சம் சிக்கியது. இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை மேலும் நீடித்து வந்தது.

அந்த வரிசையில் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் இதர காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்தனர். அந்நேரம் சோதனை செய்ததில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தங்கியிருக்கும் வீட்டிற்க்கே சென்று லஞ்ச ஒழிப்புஇ போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அவரது வீட்டில் குவியல் குவியலாக பட்டாசுகள் மற்றும் புது துணிமணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்தையும் தாண்டும் என்று கணக்கிடப்பட்டு பிறகு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை வரவேற்று திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.