சொத்துவரி கணக்கிடும் முறை தேவையில்லாதது-டிடிவி தினகரன்

மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சொத்துவரி கணக்கிடும் முறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவரை வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

சென்னை பெருநகரம் உள்ளிட்ட, மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதமாகவும், வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவீதமாகவும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எழும்பிய கடுமையான கண்டனத்தின் காரணமாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட சொத்துவரியில், வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 50 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது.

ஆனால், சொத்துவரி கணக்கிடும் நடைமுறையில், மக்கள் தாங்கமுடியாத பெரும் சுமையை, அவர்கள் தலையில் அரசு சுமத்தி உள்ளது. சொத்துவரி கணக்கிடும் முறையில், நிலத்தின் தற்போதைய மதிப்பை கணக்கில் எடுத்து, உச்சபட்சமாக எந்த அளவுக்கு உயர்த்தமுடியுமோ அத்தனை வழியையும் பின்பற்றி, சொத்து வரி உயர்த்தி நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்கள்.
அதனை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கடந்தமுறை மக்கள் செலுத்திய வரியைக் காட்டிலும், நூறு மடங்கிற்கு மேலாக கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்களை அரசு உட்படுத்தி உள்ளது.

மக்களுக்கான அரசாங்கத்தின் செயல் இது அல்ல, மக்களை ஏமாற்றும் ஒரு தந்திர செயல். குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், வாடகை குடியிருப்புகளுக்கு 50 சதவீதம், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என்று மேம்போக்காக அறிவித்து மக்களிடமிருந்து பலமடங்கு வசூல் செய்வது மக்களாட்சியின் முறையே அல்ல.

மத்திய அரசிடம் பேசி அவர்கள் தரவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை முழுமையாகப் பெறாமலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தாத காரணத்தால் வரவேண்டிய நிதியைப் பெற முடியாமலும் இருக்கிறது இந்த அரசு.

ஏற்கனவே 60 சதவீதத்திற்குமேல் பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு, தற்போது சொத்து வரியை பலமடங்கு உயர்த்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

தங்களின் நிர்வாகத் திறமையின்மைக்காக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் எடப்பாடி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த சொத்து வரி கணக்கிடும் முறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.