சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் ஆளுநர் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தனித்தனியே அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 51 திருமண ஜோடிகளையும் தனித்தனியாக அட்சதை தூவி வாழ்த்தினார்.

தமிழகம் முழுவதும் இருந்து 111 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதில் 53 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2 ஜோடிகள் நேற்றைய திருமண விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமண ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் 2 கிராம் தங்கத் தாலி, வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டு வேட்டி, சேலை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாய், தலையணை, போர்வை உள்பட 51 வகை பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வரிலால் புரோகித் பேசியதாவது.,

உலக அளவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாநில அளவில் இது 1.63 சதவீதமும், தேசிய அளவில் 4.4 சதவீதமும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1993-ல் தனி இயக்குனரகத்தை தொடங்கியதுடன், அவர்களுக்கு என தனி கொள்கை திட்டத்தை 1994-ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்த மாநிலமாக கடந்த 2013-14-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிறரின் நலனை கருத்தில் கொண்டு வாழ்வதே மனித தன்மையாகும். சுயநலத்தோடு வாழ்பவர்களால் அவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால், சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பிறருக்கு உதவி செய்ய முன் வந்தால் உலகமே சொர்க்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.