மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு ஸ்டாலின் செல்ல காரணம் என்ன? -தம்பிதுரை

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்ல வேண்டும்?, என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளான இன்று கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மாலை அணிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கொடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம்.

பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது.

தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கை.

அவரிடம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தம்பிதுரை பதில் அளிக்கும் போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது என்றார்.

இவ்வாறு தம்பிதுரை பேசினார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.