போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்- அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தமிழக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என ஜெயலலிதா கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆராயப்படும் என்றுதான் ஜெயலலிதா கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மத்திய அரசும் பிற மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தையே பின்பற்றுகின்றன. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

கல்விக்கும் பணிக்கும் இடையூறு போராட்டங்கள் நடத்துவதை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். இல்லாவிட்டால் பணிக்கு செல்லாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவது சாத்தியமில்லை. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் நிதியை செலவிட்டு விட்டால் மக்கள் திட்டங்களுக்கு நிதியில்லாமல் போகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.