மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றோடு 6-வது நாளாக தொடர்ந்து வரும் இந்த வேலைநிறுத்ததால், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி அமர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ‘‘அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள். நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக புதிதாக உத்தரவு ஏதும் பிறக்க முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு மீதான மறு விசாரணை வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் அமர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இன்று பேட்டியெடுத்த போது அவர் கூறியதாவது:-

அரசின் கஷ்டங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய பணிகளுக்கு திரும்ப வேண்டும். வருகிற பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதிக்கு பிறகு பொதுத்தேர்வுகள் வருகிறது. ஆகவே மாணவர்களுடைய எதிர்காலத்தை மனதில் கொண்டு ஆசிரியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, அமைச்சர் செங்கோட்டையன் அதனை முதல்வருடன் கலந்து பேசிய பின்புதான் என்னவென்று தெரியும் என்று கூறினார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.