மினிமம் சேலரி திட்டத்தை கண்டு பாஜக பயப்படுகிறது- திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி அறிவித்துள்ள மினிமம் சேலரி திட்டத்தை கண்டு பாஜக அரசு பயப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்த பட்ச வருமானம் வழங்கப்படும் இந்த திட்டம் வேலை பார்க்காதவர்களுக்கும் பொருந்தும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பபெற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அங்கு விவசாயிகள் கடன் ரத்துசெய்யப்பட்டது. சாதாரண மக்களின் குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். நான்கரை ஆண்டுகளாக எதுவுமே செய்யாத பாரதிய ஜனதா கட்சி ராகுல்காந்தி அறிவித்த திட்டத்தை கண்டு பயப்படுகின்றது. இதை நிறைவேற்ற முடியாது என்ற அவநம்பிக்கையை மக்களிடத்தில் பரப்ப நினைக்கின்றனர். 

தமிழகத்தில் நிறைய மாவட்டங்கள் வறட்சியில் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மத்திய அரசு முழு ஆண்டு பட்ஜெட் போட முடியாது. பொய்யான, தவறான வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவிக்க கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.


Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.