பொள்ளாச்சி சம்பவத்தை போல் நாகையில் நடந்த கொடூரம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர் வயது 23. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இளம் பெண் வேலை பார்த்த கடைக்கு அடிக்கடி வந்துள்ளார் சுந்தர். இதன் மூலம் சுந்தருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாய் மாறியுள்ளது.

இருவரும் 1 வருடம் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுந்தர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார் இளம் பெண்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் மீண்டும் அந்த பெண்ணை தன்னுடன் பழக வைக்க திட்டம் ஒன்றை தீட்டினான். அதன்படி மீண்டும் தனது காதலியான இளம் பெண்ணிடம் சென்று சாமர்த்தியமாக பேசி மயக்கி நட்பை நீட்டித்துள்ளார்.

இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார்.

அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.