பட்லரின் மன்கட் அவுட் மிக்க மகிழ்ச்சி தருகிறது ஜோ ரூட் அதிர்ச்சி பேட்டி

ஜாஸ் பட்லரின் நெருங்கிய நண்பரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட், பட்லரின் மன்கட் அவுட் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டியளித்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். அஸ்வின் செய்த மன்கட் அவுட் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனையடுத்து அஸ்வினின் மீது கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது கிரிக்கெட் விதிகளின் படி சரியே எனக் கூறி பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவு கரம் நீட்டினர்.

அதே சமயம் பல வெளிநாட்டு வீரர்கள் ஈயான் மோர்கன், ஜேசன் ராய், மைக்கேல் வாஹன், ஷேன் வார்ன் ஆகியோர் அஸ்வினின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அஸ்வினின் செயல் கிரிக்கெட் உணர்வை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது, விதிகளின் படி பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது சரியே. பௌலர் பந்து வீசும் போது நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் க்ரீஸுக்குள் தான் இருக்க வேண்டும். இது மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கும்.

நான் இப்படி சொல்வதால் மன்கட் முறையை ஆதரிக்றேன் என்றில்லை. நான் இது போன்ற விஷயங்களை ஆதரிப்பதும் இல்லை. ஆனால் பட்லரின் சர்ச்சை அவுட் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏனென்றால், இன்னும் இரண்டு மாதத்தில் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் போதோ அல்லது லீக் போட்டியில் விளையாடும் போதோ இது போன்ற சிறு விஷயங்கள் இங்கிலாந்து அணியின் வெற்றியை பாதிக்க கூடாது. இதிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.