இதைவிட சிறந்த தொடக்கம் கிடைக்காது அல்ஜாரி ஜோசப் பேட்டி

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மலிங்கா உள்ளுர் போட்டியில் விளையாட இலங்கை திரும்பியதால், இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்புடன் களம் இறங்கியது மும்பை அணி.

ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரோகித் சர்மா, குவின்டன் டி காக், சூர்ய குமார் யாதவ் என அனைவரும் அடுத்தடுத்து வெளியேறினர்.ஒரு கட்டத்தில் மும்பை அணி 100 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தது. கடைசி நேரத்தில் பொல்லார்ட் அதிரடி காட்டியதால் மும்பை 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

பேர்ஸ்டோ மற்றும் வார்னரின் உச்சகட்ட ஃபார்ம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. பும்ரா, பெகரன்ட்டாஃப், ஹர்திக் ண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே வெற்றி என நினைத்தனர் ரசிகர்கள். யாரும் அல்ஜாரி ஜோசப்பை கண்டு கொள்ளவில்லை.

அல்ஜாரி ஜோசப் தான் வீசிய முதல் பந்திலே நல்ல ஃபார்மில் இருந்த வார்னரை போல்டு செய்தார். அதனை தொடர்ந்து விஜய் சங்கர், ஹூடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கௌல்  அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தினார்.

அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இதனால் மும்பை அணி எளிதில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் தனது ஆட்டம் குறித்து அல்ஜாரி ஜோசப் கூறியதாவது.,

ஐ.பி.எல்லில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அது இன்று நிறைவேறிவிட்டது. ஐ.பி.எல்லில் இதைவிட சிறந்த தொடக்கம் எனக்கு கிடைக்காது. நான் என் அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, எனது திட்டங்களை செயல்படுத்தினேன். விக்கெட்டுகளை வீழ்த்துவதில் குறியாக இருந்தேன். ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். பெருமையாக உணர்கிறேன். எனது அணியினர் எனக்கு மிகவும் உறுதுனையாக இருந்தனர் என அவர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.