ஜாஸ் பட்லரை திட்டம் போட்டு தான் அவுட்டாக்கினோம் அஸ்வின் பரபரப்பு பேட்டி

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் 30 (22), மயங்க் அகர்வால் 26 (12), டேவிட் மில்லர் 40 (27) என அதிரடியாக ஆடினர். மறுமுனையில் ஆமை வேகத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் ஆடிய கே.எல் ராகுல் 45 பந்தில் 52 ரன்களை எடுத்து அவுட்டானார். 15-19 ஓவரில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது, அஸ்வின் கடைசி ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி என 4 பந்தில் 17 ரன்களை குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 182/6 என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதனையடுத்து பேட் செய்ய வந்தது ராஜஸ்தான் அணி. அஸ்வினின் மன்கட் அவுட்டிற்கு பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 23 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து வந்த ராஜஸ்தான் வீரர்கள் மிகவும் நிதானமாக ஆடினர். அந்த அணியின் ராகுல் திருப்பாதி 50(45), ரஹானே 27(21), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷ்டன் டர்னர் 1(0) என அவுட்டாகினர்.ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்டுவர்ட் பின்னி 11 பந்துகளில் 33 ரன்களை குவித்தார். இருந்தாலும் ராஜஸ்தான் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது, ஐ.பி.எல் தொடரின் முக்கியமான தருணத்தில் 10 புள்ளிகளை பெற்று, புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். இப்போட்டியை வெற்றி பெற 10-15 ரன்கள் குறைவாக அடித்தாக நாங்கள் கருதினோம். மொஹாலியில் எப்போதும் 2வதாக பந்து வீசுவது கடினம். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

பட்லரை அவுட்டாக்க புதிய திட்டத்தோடு தான் வந்தோம். அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி பட்லரை அவுட் செய்தார் அர்ஷ்தீப் சிங் அவருக்கு எனது பாராட்டுகள்.

அர்ஷ்தீப் சிங் இரண்டு புறமும் பந்தை ஸ்விங் செய்ய கூடியவர். நல்ல வேகமும் அவரிடம் உண்டு. அவர் உலக கோப்பை இந்திய அணியோடு வலை பயிற்சி பந்து வீச்சாளராக செல்வது மகிழ்ச்சி தருகிறது. கே.எல் ராகுல் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருப்பதும் மகிழ்ச்சி தருகிறது. முஜீப் ரகுமான் காயத்தால் அவதியுற்று வருகிறார். ஹென்றிக்யூஸ் தற்போது நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.