மார்ச் 10 ல் உறுதியான ஆர்யா – சாயிஷா திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாய்ஷாவை திருமணம் செய்துகொள்ள போவதாக வந்த தகவலை அடுத்து வரும் மார்ச் 10 ம் தேதி திருமணம் நடக்கயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2005 ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர்தான் நடிகர் ஆர்யா. அரியாவிற்கு தற்போது 38 வயது ஆகிறது.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர்.


மே 22 ஒரு சம்பவம் – படமாகும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு

கடந்த வருடம் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான நிலையில், அந்த சம்பவம் தற்போது படமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக போராட்டத்தின் 100 வது நாளான மே 22 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள்மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அந்த சம்பவத்தை படமாக்கப்போவதாக இயக்குனர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். இவர் ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் படமாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வைரலாகும் பிரியா வாரியரின் “டாட்டூ”

ஒரு அடார் லவ் படத்தில் கண்ணசைவை கட்டி பிரபலமடைந்தவர் தான் பிரியா வாரியர். அதனை தொடர்ந்து தற்போது அவரது டாட்டூவும் வைரலாகி வருகிறது.

ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணசைவால் பல இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் பிரியா வாரியர்.

தற்போது அந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் ரிலீசாகிறது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.


பத்மஸ்ரீ விருதுபெறும் பிரபுதேவா..

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பிரபுதேவா, மோகன்லால், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் பிரபுதேவா, மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜூமுருகன் படத்தில் இணையும் சசிகுமார்,சமுத்திரக்கனி

ஜிப்ஸி படத்தை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய ஜிப்ஸி படம் ரிலீஸ்க்கு தயாராகும் இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கியுள்ள ராஜூமுருகன் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை கேட்ட இருவருக்குமே படத்தின் கதை பிடித்திருக்கிறதாம்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஜிப்ஸி ரிலீசுக்கு பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.


என் பாட்டி முழுநேர நடிகை அல்ல – கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் தனது பாட்டிக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

வாரிசு நடிகையாக அறிமுகம் ஆனாலும் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் அம்மா, பாட்டி ஆகிய எல்லோரும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் பாட்டி தனது 80 வது வயதில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ரெமோ, கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த அவர் தாதா 87 படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பாட்டிக்கு வாய்ப்பு கேட்பதாக ஒரு செய்தி பரவி வந்தது.

இதுபற்றி கேட்டதற்கு ‘யார் இப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு நடிக்கும் அளவுக்கு பாட்டி ஒன்றும் முழுநேர நடிகை அல்ல. இந்த செய்தியை படித்துவிட்டு குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம்’ என்று கூறினார் .


“வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைக்கு வருகிறான்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படக்குழு படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

சிம்பு நடித்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் தற்போது ரிலீஸ் க்கு தயாராக உள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழுவில் “யு” சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 
ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 
லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மஹா படப்பிடிப்பில் காயமடைந்த ஹன்சிகா

ஹன்சிகா தற்போது நடித்துவரும் “மஹா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது ஹன்சிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக்காட்சியில் ஹன்சிகா கர்ணம் அடிப்பது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. ஒரு சிறு கால இடைவேளையில் தவறாக அது காயத்தில் முடிந்தது. 
விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது.

காயத்திலிருந்து மீண்ட ஹன்சிகா சிறிதும் தயக்கம் இன்றி அந்த காட்சியை நடித்து முடித்தார். இப்படம் ஹன்சிகாவின் 50வது படம், 
இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இணையத்தை கலக்கும் ஜீவா படத்தின் பாடல்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து உருவாகி இருக்கும் ஜிப்ஸி படத்தின் ஒரு பாடல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் அதனை தொடர்ந்து படத்தின் சிங்கள் ட்ராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. https://youtu.be/HjJYYnsfXGI


நிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இந்த பாடலில் தோன்றுகின்றனர். ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இரட்டை வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கயுள்ளார்.

செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல்குமார் இயக்கத்தில் நடிக்கயுள்ளார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து மதியழகன் கூறும்போது, ‘இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்க இருக்கிறது’ என்று கூறியுள்ளார் .


இரண்டாவது முறையாக இணையும் அசோக் செல்வன் -ஜனனி

அசோக் செல்வன் மற்றும் ஜனனி சேர்த்து நடித்த தெகிடி திரைப்படத்தில் இவர்களின் ஜோடி பெருமளவு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணையயுள்ளனர்.

பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி ஐயர். இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார்.

தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மர்ம கொலைகளை மையமாக கொண்டு சந்தீப் இயக்கம் இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கயுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஜனனி ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் தெகிடி என்ற படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கனடா தமிழ் இருக்கைக்கு இசையமைக்கும் இமான்

கனடாவில் உள்ள பிரபல டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக உலகளவில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு அமைக்கப்படும் இருக்கைக்கான வாழ்த்துப்பாடலை உருவாக்கும் பணி தமிழ் இசையமைப்பாளரான இமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு மாற்றத்திற்கான தலைவர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த இமான் “இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் கனடா அமைப்பிற்கு நன்றி, தமிழ் வாழ்த்துப்பாடலுக்கு இசையமைப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாழ்க” என பதிவிட்டுள்ளார்


இந்தியன் 2 படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர். ரகுமான்

இந்தியன் 2 படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 22 வருடங்களுக்கு முன் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனபோதும் தற்போது சங்கர் இயக்கி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் ஏ.ஆர். ரகுமான் இடம்பெறவில்ல, மாறாக அனிருத் இடம்பெற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 18 ம் தேதி அன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியன் 2 படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.அதனையடுத்து அவருக்கு இயக்குனர் சங்கர் அவர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்.


அரசு பேருந்தில் ஒளிபரப்பான பேட்ட; விஷால் கண்டனம்

அரசு பேருந்தில் ‘பேட்ட’ படம் ஒளிபரப்பிய சம்பவதிற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக புதிய படங்கள் திரையரங்கை வந்தடையும் சேதி கேட்கும் முன்னே அவை இணையதளங்களில் வரும் செய்திதான் கேட்கிறது. 
இதனால் வசூல் பெருமளவு பாதிக்கிறது. பெருமளவில் அதிகரித்து வரும் இந்த செயலை எதிர்த்து எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லாமல் போனது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்களை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டில் தடை பெற்று இருந்தனர். அதையும் மீறி படம் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் முழு படமும் இணையதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் பேட்ட படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து ஒரு அரசு பஸ்லில் ஒளிபரப்பி உள்ளனர். அந்த வீடியோ காட்சியை பஸ்சில் பயணம் செய்த ரஜினி ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமாகி சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து உள்ளார். “அரசு பஸ்களில் திருட்டுத்தனமாக படங்களை ஒளிபரப்புவது இந்த வீடியோ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்


ரஜினிகாந்தின் அடுத்த படம்!

ரஜினிகாந்த் நடித்து கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் வெளிவந்த ‘பேட்ட’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் அடுத்து யாருடைய டைரக்‌ஷனில் நடிப்பார்? என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதால், அந்த படத்தில்தான் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு கதையும் ரஜினிகாந்துக்கு பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ‘கபாலி,’ ‘காலா’ ஆகிய 2 படங்களிலும் அடுத்தடுத்து நடித்தது போல், ‘பேட்ட’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் நடித்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்!